பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ் |Kundrathur Rowdy |Tamil Azhagu Rowdy |Police Firing |Police Encounter Chennai குன்றத்தூர் அருகே கைது செய்ய முயன்றபோது போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை, தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பு என்ற தமிழழகு, வயது 26. தாம்பரம் காவல் ஆணையரகத்தின் ஏ+ சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 19-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் திருமுடிவாக்கம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், காவனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி பின்புற காலி மைதானத்தில் கருப்பு மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் என்ற சூர்யா, வயது 24, ஆகியோர் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வருவதாக திருமுடிவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது, கருப்பு போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீச முயன்றதுடன், அருகில் இருந்த தலைமை காவலர் விஜயகுமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றார். இதில் தலைமை காவலரின் வலது முழங்கையில் வெட்டு விழுந்தது . இதையடுத்து, தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் துப்பாக்கியால் சுட்டதில், கருப்பின் வலது காலில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் கீழே சரிந்தார். தப்பிச் செல்ல முயன்ற ஆகாஷ் என்ற சூர்யாவையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். காயமடைந்த தலைமை காவலர் விஜயகுமார் மற்றும் கருப்பு ஆகியோர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்யும் நோக்கில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தனரா?, அதற்கு வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் திருமுடிவாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
கடலூர் • 54 minutes ago