நில அளவை கோபுரங்களை பாதுகாக்க வழியே இல்லையா? | Demand to preserve 200-year-old land survey towers | Thirunelveli திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே பரமேஸ்வரபுரத்தில் 200 ஆண்டு பழமையான பிரிட்டிஷ் கால நில அளவை கோபுரங்கள் இன்றவும் மிடுக்காகக் காட்சியளிக்கின்றன. இந்த அளவீட்டுக் கோபுரம், தட்டையான நிலப்பரப்பை அளக்கப் பயன்படுத்தப்பட்டது. கனமான தியோடோலைட் கருவிகளை பயன்படுத்தி பார்வைக் கோணங்களை அளவிடவும் இது உதவியாக இருந்தது. மேலும் துணைக் கண்டத்தை வரைபடமாக்கவும் கட்டப்பட்ட ஒரு உயரமான, உறுதியான செங்கல் அமைப்பாகும். இந்த அளவீட்டுக் கோபுரம் மூலம் முழு இந்திய நிலப்பரப்பையும் முக்கோண முறையில் துல்லியமாக அளந்து வரைபடமாக்க முடியும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வில்லியம் லாம்ப்டன் என்ற பிரிட்டிஷ் நில அளவையாளர் தலைமையில் முக்கோணவியல் நில அளவை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் நில அளவை கோபுரங்கள் அமைக்கப்பட்டன. அதில் திருநெல்வேலியில் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூர், பரமேஸ்வரபுரம் மற்றும், சென்னை செயின்ட் தாமஸ் மவுண்டிலும் இத்திட்டத்தின் முக்கிய நில அளவை மையங்கள் அமைக்கப்பட்டன. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் கணித அடிப்படையில் நிலங்களை அளவிட இந்த கோபுரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த நிலஅளவை கோபுரங்கள் தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் கோபுரங்களை சுற்றி புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த கோபுரங்களை பராமரிக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி கலெக்டரிடம் மனு அளித்தார். மனுவில், பிரிட்டிஷ் கட்டிய இந்த வரலாற்று சின்னமான நில அளவை கோபுரங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வரலாற்றுச் சின்னங்களை தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும். மேலும், வரலாற்று சுற்றுலா மையமாக மேம்படுத்தினால், இந்திய நில அளவை வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

இந்தியா • 24-Jul-2026